திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஊராட்சி மன்ற தலைவர் தலை நசுங்கி சாவு; மகனை பார்க்கச்சென்ற போது பரிதாபம்

திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மகனை பார்க்கச்சென்ற ஊராட்சி மன்ற தலைவர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-04-15 19:14 GMT

ஜீயபுரம்,

திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மகனை பார்க்கச்சென்ற ஊராட்சி மன்ற தலைவர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஊராட்சி மன்ற தலைவர்

தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த வளப்பக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 53). அ.தி.மு.க. பிரமுகரான இவர் வளப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (50).

இவர்களுக்கு ராமசந்திரன் (31), சரவணன் (27) ஆகிய 2 மகன்களும், கீதா (23) என்ற மகளும் உள்ளனர். கரூரில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வரும் சரவணனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

லாரி மோதி பலி

இதனால் தனது மகனை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு வளப்பக்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கரூருக்கு சங்கர் புறப்பட்டார். திருச்சி-கரூர் ரோட்டில் திருச்சி அருகே உள்ள முக்கொம்பு பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு லாரி சங்கரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சங்கர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்