மானூர் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதல்; தபால் நிலைய பெண் ஊழியர் பலி
மானூர் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் தபால் நிலைய பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மானூர்:
மானூர் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் தபால் நிலைய பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தபால் நிலைய பெண் ஊழியர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதியாநகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் திருவுடையான். இவருடைய மனைவி சங்கரம்மாள். இவர்களுக்கு அன்பரசி (வயது 20) என்ற மகளும், பாரதி என்ற மகனும் இருந்தனர்.
பி.எஸ்சி. கணிதம் பட்டப்படிப்பு படித்த அன்பரசி, கடந்த சில மாதங்களாக நெல்லை மாவட்டம் மானூர் அருகே அழகியபாண்டியபுரம் தபால் நிலையத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வந்தார்.
இவர் தினமும் சங்கரன்கோவிலில் இருந்து அழகியபாண்டியபுரத்துக்கு பஸ்சில் வேலைக்கு செல்வார். பின்னர் அங்கிருந்து தனது ஸ்கூட்டரில் தபால் நிலையத்துக்கு சென்று தபால் கடிதங்களை எடுத்து வருவது வழக்கம்.
ஸ்கூட்டர் மீது லாரி மோதியது
அன்பரசி வழக்கம்போல் சங்கரன்கோவிலில் இருந்து அழகியபாண்டியபுரத்துக்கு பஸ்சில் வந்தார். பின்னர் அங்கிருந்து தனது ஸ்கூட்டரில் தபால் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்.
மானூர் அருகே கட்டாரங்குளம் விலக்கு பகுதியில் நெல்லை-சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டரின் பின்னால் பயங்கரமாக மோதியது.
பலி
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்த அன்பரசி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்த அன்பரசியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான நெல்லை டவுனைச் சேர்ந்த சவுந்தர்ராஜை (53) கைது செய்தனர். மானூர் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் தபால் நிலைய பெண் ஊழியர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.