சேற்றில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை யில் சேற்றில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Update: 2021-04-15 18:25 GMT
வால்பாறை

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை யில் சேற்றில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். 

மண் சரிந்து விழுந்தது 

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கவர்க்கல் எஸ்டேட் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் செல்லக்கூடிய வகையில் சிறிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. 

பாலத்தின் ஒரு பகுதியில் மட்டுமே பணி முடிந்ததால் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்கிறது. இந்த நிலையில் வால்பாறை பகுதியில் கனமழை காரணமாக சாலை ஓரத்தில் இருந்து மண் சரிந்து பாலத்தில் வேலை நடந்த இடத்தில் விழுந்தது. 

லாரி சேற்றில் சிக்கியது 

அப்போது அந்த வழியாக விறகு கட்டைகளை ஏற்றி வந்த லாரி அந்த சேற்றில் சிக்கியது. லாரி அதிக பாரத்துடன் இருந்ததால் சேற்றில் பதிந்து கொண்டது. இதனால் அந்த லாரியை அங்கிருந்து அகற்ற முடியவில்லை. 

இதன் காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருபுறத்திலும் சாலையில் வாகனங்கள் நீண்ட வாிசையில் காத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். 

போக்குவரத்து பாதிப்பு 

பின்னர் கிரேன் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் சேற்றில் இருந்து சிக்கிய லாரி அகற்றப்பட்டது. அதன் பின்னரே அந்த வழியாக வாகனங்கள் சென்றன. இதன் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்