கருப்பட்டி, பனைவெல்லத்தில் கலப்படத்தை தடுக்க குழு நியமனம்

கருப்பட்டி, பனைவெல்லத்தில் கலப்படத்தை தடுக்க குழு நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-04-15 18:17 GMT
மதுரை, ஏப்.
கருப்பட்டி, பனைவெல்லத்தில் கலப்படத்தை தடுக்க குழு நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கலப்படம்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழக அரசின் மரம் பனை ஆகும். பனையின் ஒவ்வொரு பாகமும் நமக்கு பயன்படுகிறது. அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவை.
பனங்கூழ், பனம்பழம், பனைவெல்லம், பனை கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி, வேம்பார் பகுதிகள் பனை வெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி தயாரிப்பில் பிரசித்தி பெற்றவை. ஆனால் பலர் சர்க்கரை பாகு, சர்க்கரை ஆகியவற்றோடு சில ரசாயனங்களைச் சேர்த்து பனை வெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற தோற்றத்தையும் வாசனையையும் ஏற்படுத்தி போலியானவற்றை தயாரித்து விற்பனை செய்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சர்க்கரை, சர்க்கரை பாகு ஆகியவற்றை கலப்படம் செய்து பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிக்க தடை விதிக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நேரில் ஆஜராக உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “பனை வெல்லம், கருப்பட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள், வல்லுனர்கள் கொண்ட மாநில அளவிலான குழு அமைத்து, கருப்பட்டி, பனை வெல்லம் உள்ளிட்ட பனை பொருட்களில் போலி மற்றும் கலப்படங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
பின்னர் நீதிபதிகள், “இந்த குழுவின் தலைவர் அடுத்த விசாரணையின்போது இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். 
அதை தொடர்ந்து விசாரணையை ஜூன் மாதம் 21-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்