குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
தேனி மாவட்டம் கூடலூரில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி :
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் லோயர்கேம்பிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக கூடலூருக்கு வரும் குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனை சரி செய்வதில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் புகார் கூறிவந்தனர்.
இதனால் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து 10,11,12 ஆகிய வார்டுகளை சேர்ந்த பெண்கள் நகராட்சி அலுவலகத்துக்கு சென்று சீராக குடிநீர் வினியோகிக்ககோரி மனு கொடுத்தனர்.
20-வது வார்டு கரிமேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த பெண்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கூடலூர் வடக்கு ரத வீதியை சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்ததால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.