ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்திற்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக நாள்தோறும் 30 முதல் 40 வரையிலான எண்ணிக்கையில் வேகமாக உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் முதுகுளத்தூரை சேர்ந்த 69 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்தபோது இறந்துபோனார்.
மேலும், ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலையில் மட்டும் ராமநாதபுரத்தில் சிகிச்சையில் இருந்த பெண் உள்பட 3 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சிக்கல் பகுதியை சேர்ந்த 57 வயது பெண்ணும், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 59 மற்றும் 65 வயது ஆண்கள் இருவர் நோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி இறந்து போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் சிக்கல் பகுதியை சேர்ந்த பெண் இறப்பு மட்டுமே கொரோனா பாதிப்பு என்றும் மற்ற இருவருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும் ஆஸ்பத்திரி வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டதாக கூறப்படுவதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.