மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்ததை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்ததை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

Update: 2021-04-15 17:17 GMT
மதுரை, ஏப்.
கன்னியாகுமரி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆஸ்டின், தோவாளையைச் சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட பலர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருந்ததாவது:-
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை பாரம்பரிய பகுதியாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வன சரணாலயம் உள்ளது. தற்போது இந்த மலைப்பகுதி சுற்றுச் சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்காமல், சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டல எல்லையை 3 கிலோ மீட்டர் வரை நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல. எனவே அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுக்களில் கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, இந்த அறிவிப்பால் ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாது. மக்களுக்கு உதவிடும் வகையிலும், சுற்றுச் சூழலை பாதுகாத்திடும் வகையிலும், நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையிலும்தான் இந்த நடவடிக்கை என்று தெரிவித்தார்.
விசாரணை முடிவில், நீண்ட ஆலோசனை மற்றும் விவாதத்திற்கு பிறகே விதிகளை பின்பற்றி சூழலியலை பாதுகாத்திடும் வகையில் இந்த அரசாணை கொண்டு வரப்பட்டுள்ளது. மனுதாரர்கள் உள்ளிட்ட யாருக்கும் ஆட்சேபனை இருந்தால் மண்டல அளவிலான மாஸ்டர் பிளான் வெளியான பின் தங்களது குறைகளை தெரிவித்து உரிய நிவாரணம் பெறலாம். யூகத்தின் அடிப்படையில் தான் இந்த மனுக்கள் தாக்கலாகியுள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட விரும்பவில்லை என்பதால் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்