கார்களில் கடத்தப்பட்ட 180 மதுபாட்டில்கள் பறிமுதல்
வானூர், மயிலத்தில் கார்களில் கடத்தப்பட்ட 180 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மயிலம்.
வானூரை அடுத்த மொரட்டாண்டி மதுவிலக்கு சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்ததில் அந்த காரினுள் 120 உயர்ரக மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த காரை ஓட்டி வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் தஞ்சாவூர் பத்மநாபன் நகரைச் சேர்ந்த இருதயராஜ் மகன் அலெக்ஸ் (வயது 32) என்பதும், அவர் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சென்னைக்கு மதுபான பாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அலெக்சை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்தனர்.
மூதாட்டி கைது
இதேபோல் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் மயிலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்தனர். உடனே காரை நிறுத்தி விட்டு டிரைவரும், ஒரு பெண்ணும் ஓடிவிட்டனர். அந்த காரில் மூதாட்டி ஒருவர் மட்டும் இருந்தார். மேலும் அந்த காரில் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் இருந்தன. போலீசார் நடத்திய விசாரணையில், திண்டிவனம் அடுத்த கீழ் எடையாளத்தை சேர்ந்த பார்வதி(67) என்பதும், புதுச்சேரியில் இருந்து காரில் 150 லிட்டர் சாராயம் மற்றும் 60 மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பார்வதியை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கார் மற்றும் சாராயம், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.