கலைநிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நாடக கலைஞர்கள் மனு

கலைநிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நாடக கலைஞர்கள் மனு கொடுத்தனர்.

Update: 2021-04-15 17:04 GMT

பழனி:
பழனி தாலுகா பகுதியை சேர்ந்த நாடக கலைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் திரண்டனர். அப்போது அவர்கள் விநாயகர், காளியம்மன், கருப்பசாமி உள்ளிட்ட தெய்வங்களின் வேடமணிந்து இருந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று சப்-கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். 
அந்த மனுவில், பழனி தாலுகாவில் 600-க்கும் மேற்பட்ட நாடக கலைஞர்கள் வசித்து வருகிறோம். கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு எங்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது கோவில் திருவிழா நடத்த மீண்டும் அரசு தடை விதித்துள்ளது. 
இது எங்களை நிலைகுலைய செய்துள்ளது. மேலும் அரசு அறிவித்த நிவாரணமும் முழுமையாக கிடைக்கவில்லை. எனவே அனைத்து கலைஞர்களுக்கும் நிவாரணம் கிடைக்கவும், கட்டுப்பாடுகளுடன் கலைநிகழ்ச்சிகளை நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.


மேலும் செய்திகள்