பல்லடம் அருகே சாலையில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

பல்லடம் அருகே சாலையில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

Update: 2021-04-15 16:59 GMT
பல்லடம்
பல்லடம் அருகே உள்ள நொச்சிபாளையம் பிரிவில் இருந்து அல்லாளபுரம் செல்லும் முக்கியமான சாலை உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பனியன் நிறுவனங்களுக்கு  செல்லும் வாகனங்கள் மற்றும் தொழிலாளர்களின் வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் அந்த ரோட்டில் ஏ.பி.நகர் என்ற இடம் அருகே உள்ள சாலை ஏற்கனவே பழுதடைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் பல இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மழைநீரில் நீந்திச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழைநீர் தேங்கி நிற்பதால் 2 சக்கர வாகன ஓட்டிகள் அதிலிருக்கும் குழிகள் தெரியாமல், வாகனங்களை அதில் இறக்கி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த சாலையை பராமரிப்பு பணி செய்வதாக நெடுஞ்சாலை துறையினர் 3 மாதங்களுக்கு முன்னரே அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். ஆனாலும் இன்னும் பணி தொடங்கவில்லை. எனவே விரைவாக இந்த சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்