நூதன முறையில் மோசடி செய்த பெண் கைது

மதுரையில் ஓய்வு பெற்ற என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.68 ஆயிரம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-04-15 16:57 GMT
மதுரை,ஏப்
மதுரையில் ஓய்வு பெற்ற என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.68 ஆயிரம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
ஏ.டி.எம். கார்டை மாற்றி மோசடி
மதுரை எல்லீஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆதிஜெகநாதன் (வயது 64). ஓய்வு பெற்ற என்ஜினீயர். சம்பவத்தன்று இவர் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அங்குள்ள எந்திரத்தில் கார்டை செலுத்தி பணம் எடுக்க முயன்றபோது பணம் வரவில்லை. அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் உதவி செய்வது போல் நடித்து நைசாக ஆதிஜெகநாதன் வைத்திருந்த ஏ.டி.எம்.கார்டை வாங்கிக் கொண்டு வேறு ஒரு கார்டை அவரிடம் கொடுத்தார்.
பின்னர் அவர் வீட்டிற்கு சென்றபோது அவரது செல்போனிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் அவரது ஏ.டி.எம்.கார்டு மூலம் 68 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வங்கிக்கு சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்தார். மேலும் இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார்.
பெண் கைது
அதன் பேரில் போலீசார் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் அவரிடம் மோசடி செய்த பெண்ணின் அடையாளம் நன்கு தெரிந்தது. விசாரணையில் அவர் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் மனைவி மணிமேகலை (வயது 25) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரது ஊருக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த மணிமேகலையை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் மீது தேனி, உசிலம்பட்டி, திருமங்கலம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் இது போன்ற திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

மேலும் செய்திகள்