கொரோனா விழிப்புணர்வு பட்டங்கள் தயாரிக்கும் பணி
விழுப்புரத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா விழிப்புணர்வு பட்டங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
விழுப்புரம்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதோடு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். அதையும் மீறி தேவையில்லாமல் வெளியே வந்து ஊர் சுற்றுபவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இதனால் வெளியே சுற்ற முடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் சிறுவர்கள், இளைஞர்கள் தங்கள் வீட்டு மாடியில் நின்றுகொண்டு பட்டம் பறக்க விடுவதை பொழுதுபோக்கு ஆக்கியுள்ளனர். இதற்காக காலை, மாலை வேளைகளில் வீட்டின் மாடியில் கூட்டமாக நின்று பட்டம் விட்டு மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
விழிப்புணர்வு பட்டம்
இதையொட்டி விழுப்புரம் நகரில் பட்டம் தயாரித்து விற்பனை செய்யும் பணி நடந்து வருகிறது. விழுப்புரம் திரு.வி.க. வீதியில் ஆஞ்சநேயர் கோவில் பின்புற பகுதியில் வெங்கடேசன் என்பவர் சிறுவர், சிறுமிகளை கவரும் வகையில் விதவிதமான வண்ண பேப்பர்களில் கார்ட்டூன் படங்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட படங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட பட்டங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். தற்போது கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி அந்நோய் பரவலை தடுக்கும் வகையிலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சிறுவர், சிறுமிகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்லுதல், கைகளை நன்கு சுத்தமாக கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பேப்பர்களிலும், விழிப்புணர்வு படங்கள் அச்சிடப்பட்ட பேப்பர்களிலும் பட்டங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த பட்டங்கள் ரூ.5-ல் இருந்து ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றை சிறுவர், சிறுமிகள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.