2 ஆயிரம் நெல் மூட்டைகள் தண்ணீரில் நனைந்தன
செஞ்சி பகுதியில் திடீரென பெய்த மழையால் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக நெல் மூட்டைகள் கொண்டு வரப்படுகின்றன.
அதன்படி செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு நேற்று விற்பனைக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இவை அனைத்தும் திறந்த வெளியிலேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
மழையில் நனைந்தன
இந்த நிலையில் காலையில் திடீரென மழை பெய்தது. உடனே ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்த 10 தார்பாய்களை அதிகாரிகள் கொடுத்தனர். அதனை வாங்கிய விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை மூடினர். ஆனால் நெல் மூட்டைகள் அனைத்தையும் பாதுகாக்க முடியவில்லை.
கொட்டிய மழையால் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்தன. இதனை கண்டு விவசாயிகளின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. ஏனெனில் கடந்த 3 மாதமாக இரவு, பகல் பாராமல் உழைத்த உழைப்பின் மூலம் கிடைத்த நெல் மழையில் நனைந்து வீணானது. எனவே அந்த நெல் மூட்டைகளை வியாபாரிகள் வாங்க மாட்டார்களே என்ற அச்சத்துடன் இருந்தனர். ஆனால் மழையில் நனைந்த நெல் மூட்டைகள் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
நிரந்தர தீர்வு
விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை வைப்பதற்கு செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குடோன் மற்றும் புதிய கட்டிட வசதி உள்ளது. ஆனால் அந்த குடோன் மற்றும் கட்டிட வசதியில் வியாபாரிகள் ஏற்கனவே கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை வைத்திருந்தனர். இதனால் அங்கு நெல் மூட்டைகளை வைக்க முடியவில்லை. மாறாக திறந்தவெளியிலேயே விவசாயிகளின் நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதும், மழையில் நனைந்து வீணாவதும் தொடர் கதையாகி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.