காட்டுயானைகள் நடமாட்டம்

கூடலூர், பந்தலூரில் காட்டுயானைகள் நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Update: 2021-04-15 14:11 GMT
கூடலூர்

கூடலூர், பந்தலூரில் காட்டுயானைகள் நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

ஊருக்குள் புகுந்த காட்டுயானை

கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கர்க்கப்பாலி பகுதியில் நேற்று காலை 7 மணியளவில் காட்டுயானை புகுந்தது. 

அங்குள்ள சாலையில் உலா வந்த அந்த காட்டுயானையை பார்த்த மக்கள் பீதி அடைந்து தங்களது வீடுகளுக்குள் ஓட்டம் பிடித்தனர். மேலும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 

பின்னர் காட்டுயானை அங்கிருந்து அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. அதன்பின்னரே மக்கள் நிம்மதி அடைந்தனர். 

காலில் காயம் இல்லை

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- இந்த காட்டுயானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதை கண்காணித்து தடுக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இருப்பினும் வேறு வழியில் காட்டுயானை இடம்பெயர்ந்து செல்கிறது. அந்த காட்டுயானையின் காலில் காயம் உள்ளதாக தகவல் பரப்பப்படுகிறது. அதில் எந்தவித உண்மையும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

வீடுகள் முற்றுகை

இதேபோன்று பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே தட்டாம்பாறை, மூலக்கடை ஆகிய பகுதிகளில் வீடுகளை 4 காட்டுயானைகள் முற்றுகையிட்டன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

இதுகுறித்து பிதிர்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

மேலும் செய்திகள்