திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 4-ம் வகுப்பு மாணவி சாவு
திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 4-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த தண்ணீர் குளம் கிராமம் கஜேரிகுளத்தை சேர்ந்தவர் முருகன். இவருக்கு துர்கா என்ற மனைவியும், கோபிகா (வயது 9) என்ற மகளும் உள்ளனர். கோபிகா தண்ணீர் குளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். கணவன், மனைவி இருவரும் கீரை மற்றும் காய்கறிகளை கிராம பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை துர்கா தன்னுடைய மகள் கோபிகாவை அழைத்து கொண்டு திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளம் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் துணிகளை துவைக்க சென்றார்.
துர்கா துணிகளை துவைத்து கொண்டிருந்த போது அவரது அருகே விளையாடி கொண்டிருந்த அவரது மகள் கோபிகா எதிர்பாராத விதமாக கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதை பார்த்த துர்கா தன்னுடைய மகளை காப்பாற்ற முயன்றார். அவரால் காப்பாற்ற முடியவில்லை.
அவர் கூச்சலிட்டதை தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கால்வாயில் அடித்து செல்லப்பட்ட கோபிகாவின் உடலை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இரவு வெகு நேரம் ஆனதால் அவர்களால் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் தீயணைப்புத்துறையினர் கால்வாயில் இறங்கி கோபிகாவின் உடலை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். நேற்று காலை 9 மணியளவில் தண்ணீர் குளம் கிராமத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுகடல் பகுதியில் கோபிகாவின் உடல் பிணமாக மீட்கப்பட்டது.
இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசில் துர்கா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த கோபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.