கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிறப்பு சிகிச்சை மையம்
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 190 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை நேற்று மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில், பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வணிக வளாகங்கள், அங்காடிகள், காய்கறி சந்தை உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். மேலும் சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
ஆக்சிஜன் டேங்க்
மேலும், பொது இடங்களுக்கு தொடர்ந்து முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்ட தலைமை மருத்துவமனையில் 190 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனையில் உள்ள 512 படுக்கைகளில் 450 படுக்கைகளுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி நேரடியாக ஆக்சிஜன் செலுத்தும் வகையில், ரூ.30 லட்சம் மதிப்பில் புதிதாக 13 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் முத்துசெல்வன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன் மற்றும் டாக்டர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.