ஓரிரு நாளில் தொடக்கம்: சென்னையில் 200 வார்டில் 400 காய்ச்சல் முகாம்கள் மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னையில் 200 வார்டில் 400 காய்ச்சல் முகாம்கள் ஓரிரு நாளில் தொடங்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-15 01:07 GMT
சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்தில் ராமேஸ்வரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தியாகராயநகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாமை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. சென்னையில் தினசரி சராசரியாக 2,500 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் வீடு, வீடாக காய்ச்சல் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். காய்ச்சல் முகாம்கள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு, 50 என்ற எண்ணிக்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் வார்டுக்கு 2 முகாம்கள் முறையில், 200 வார்டுக்கு 400 எண்ணிக்கையில் காய்ச்சல் முகாம்கள் தொடங்கப்பட்டுவிடும்.

சென்னையில் 12 இடங்களில் பரிசோதனை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற சனிக்கிழமைக்குள் அவை அனைத்தும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதேபோல் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் கொரோனா மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் 12 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளது.

நேற்று முன்தினம் வரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உள்ளது. அதில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் 8½ லட்சம் பேரும், 2-வது டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் 1½ லட்சம் பேரும் அடங்குவர். தற்போது 10 லட்சம் முதல் 15 லட்சம் தடுப்பூசிகள் இருப்பு இருக்கிறது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி ஊழியர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 230 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தேவை இருந்தால் இன்னும் கூடுதலாக 10 ஆயிரம் படுக்ககைகள் தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மத்திய வட்டார இணை கமிஷனர் பி.என்.ஸ்ரீதர், துணை கமிஷனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்