சேலத்தில் சிறுமியை விற்ற வழக்கில் தொழில் அதிபர் கைது- வங்கி கணக்கு ஆய்வு

தொழில் அதிபர் கைது- வங்கி கணக்கு ஆய்வு

Update: 2021-04-14 22:58 GMT
சேலம்:
சேலத்தில் சிறுமியை விற்ற வழக்கில் கைதான தொழில் அதிபரின் வங்கி கணக்கை போலீசார் ஆய்வு செய்தனர்.
சிறுமி மீட்பு
சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில்மேடு பகுதியை சேர்ந்த சின்னப்பொண்ணு என்பவர் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில், தனது மகள் சுமதி அதே பகுதியை சேர்ந்த தொழில் அதிபரான கிருஷ்ணன் என்பவருடைய வீட்டில் வேலை செய்து வருகிறார். சுமதி அவரது மகளான 7 வயது சிறுமியை கிருஷ்ணனிடம் கொடுத்துவிட்டார். இதனால் அவர், எனது பேத்தியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்கிறார். எனவே அவரிடம் இருந்து எனது பேத்தியை மீட்டு தரவேண்டும், என்று கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த சிறுமியை கிருஷ்ணனிடம் இருந்து மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
3 பேர் கைது
இதனிடையே சுமதி செல்போன் மூலம் அவரது உறவுக்கார பெண்ணிடம் பேசும் போது, தனது மகளை ரூ.10 லட்சத்துக்கு விற்றுவிட்டதாக கூறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் கமிஷனர் கும்மராஜா விசாரணை நடத்தினார்.
பின்னர் இந்த வழக்கு தொடர்பாக கிருஷ்ணன், சுமதி மற்றும் இவருடைய கணவர் சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் கைதான தொழில் அதிபர் கிருஷ்ணன் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
வங்கி கணக்குகள் ஆய்வு
தொழில் அதிபரான கிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கிருஷ்ணனின் வீட்டில் சுமதி வேலை பார்த்து வருகிறார். அவருக்கு உதவியாக சுமதியின் மகளும் இருந்தார். சுமதி குழந்தைகளின் கல்வி செலவு மற்றும் இதர செலவினங்களையும் கிருஷ்ணனே செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதா? என்பது குறித்து கிருஷ்ணன் மற்றும் சுமதியின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் கிருஷ்ணன் ரூ.10 லட்சம் கொடுத்ததற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. மேலும் அவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு எதுவும் கொடுக்கவில்லை என்றனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்