சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் 175 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 138 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 175 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 88 பேர், ஓமலூரில் 21 பேர், ஆத்தூரில் 15 பேர், மேட்டூரில் 8 பேர், பனமரத்துப்பட்டியில் 7 பேர், வாழப்பாடியில் 5 பேர், காடையாம்பட்டி, அயோத்தியாப்பட்டணம், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், மகுடஞ்சாவடி, எடப்பாடி, சங்ககிரி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், மேச்சேரி, தாரமங்கலம், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், கொளத்தூர், நங்கவள்ளி, வீரபாண்டி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
95 பேர் ‘டிஸ்சார்ஜ்’
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 941 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 95 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். 1,116 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 12 இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு சுகாதாரத்துறையினர் நோய்தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
2 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதேபோல் சேலத்தை சேர்ந்த 63 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார்.