அயோத்தியாப்பட்டணம் அருகே ராட்சத கிரேனில் திடீர் தீ

ராட்சத கிரேனில் திடீர் தீ

Update: 2021-04-14 22:58 GMT
அயோத்தியாப்பட்டணம்:
அயோத்தியாப்பட்டணம் அருகே, ராட்சத கிரேனில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் உயிர் தப்பிக்க வாகனத்தில் இருந்து சாலையில் குதித்த டெல்லியை சேர்ந்த கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார். 
கிரேனில் திடீர் தீ
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் தொழில் அதிபர் சுரேஷ். தொழிற்சாலைகளில் உயரமான இடங்களில் பணிகள் மேற்கொள்ள பயன்படுத்தப்படும், ரூ.8 கோடி மதிப்புள்ள ராட்சத கிரேன் வாகனத்தை நாகலாந்து மாநிலத்தில் இருந்து விலைக்கு வாங்கி, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு வாடகைக்கு அனுப்பி வந்தார். 
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இயங்கும் தனியார் தொழிற்சாலையில் பணிகளை மேற்கொள்ள நேற்று முன்தினம் இந்த ராட்சத கிரேன் வாகனம் கொண்டு வரப்பட்டது. அங்கு பணிகளை முடித்து விட்டு, நள்ளிரவு 12.45 மணியளவில், வாழப்பாடியில் இருந்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மதுரை நோக்கி ராட்சத கிரேன் புறப்பட்டு சென்றது. 
அயோத்தியாப்பட்டணம் அடுத்த கருமாபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக இந்த கிரேன் வாகனத்தில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. 
கிளீனர் பலி
இதை கண்ட இந்த வாகனத்தின் மேல் அமர்ந்திருந்த கிளீனரான, தெற்கு டெல்லி பகுதியை சேர்ந்த சமீம் அகமத் (வயது 32) அதிர்ச்சியில் உயிர் தப்பிக்க வாகனத்தில் இருந்து சாலையில் குதித்துள்ளார். அப்போது தலையில் அடிபட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே கிரேன் வாகனத்தை ஓட்டி வந்த, தஞ்சாவூர் பாபநாசம் பகுதியை சேர்ந்த டிரைவர் பத்திரிநாத் (40), மற்றொரு கிளீனரான பீகார் மாநிலத்தை சேர்ந்த ஹேமந்த் (24) ஆகிய இருவரும் வாகனத்தில் இருந்து இறங்கி, தப்பித்து ஓடிவிட்டனர்.
இந்த தீ விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் மற்றும் வாழப்பாடி தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே தீயணைப்பு படையினரும், போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். சுமார் 3 மணி நேரம் தீயணைப்பு படையினர் போராடி கிரேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து காரணமாக, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.8 கோடி மதிப்பிலான ராட்சத கிரேன் வாகனம் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்த கிரேன் வாகனத்தை சாலையில் இருந்து அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்