புதுமாப்பிள்ளை உள்பட 5 பேருக்கு அரிவாள்வெட்டு; ஒருவர் கைது

சிதம்பரத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 5 பேரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-04-14 19:24 GMT
சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பாரதி தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் அருண் பிரபு(வயது 28). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் அருண் பிரபு அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த முருகன்(49) என்பவருக்கு திருமண பத்திரிக்கை வைக்காததோடு, பத்திரிகையில் அவரது பெயரையும் போடவில்லை என கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், அருண் பிரபு வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் தகராறு செய்து ஆபாச வார்த்தையால் திட்டி, வீட்டில் இருந்த அருண் பிரபு, அண்ணாதுரை, காவேரி, காசிநாதன், அசோக் ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அருண்பிரபு உள்பட 5 பேரையும் அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவுசெய்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்