மீன்பிடி தடை காலம் இன்று முதல் தொடக்கம்
தரங்கம்பாடியில் மீன்பிடி தடை காலம் இன்று முதல் தொடங்கியது. இதனையடுத்து வலை, என்ஜின்களை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொறையாறு:
தரங்கம்பாடியில் மீன்பிடி தடை காலம் இன்று முதல் தொடங்கியது. இதனையடுத்து வலை, என்ஜின்களை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
மீன்பிடி தடைகாலம் தொடங்கியது
தமிழ்நாட்டில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தையொட்டி இன்று முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைபடகு மற்றும் இழுவை படகு, இழுவலை மூலம் மீன் பிடிக்கும் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க, வழக்கம் போல் அரசு தடைவிதித்து உள்ளது.
இதனால் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, வெள்ளக்கோவில், தாழம்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த சுற்று வட்டார பகுதி மீனவர்கள் தங்களது 500-க்கும் மேற்பட்ட விசை மற்றும் இழுவை படகுகளை பராமரிப்பு பணி செய்ய நாகப்பட்டினம், காரைக்கால், ஜெகதாபட்டினம் ஆகிய துறைமுகம் பகுதிகளுக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.
என்ஜின்கள் பழுது நீக்கம்
தற்போது வலை, என்ஜின்களை பழுது நீக்கம் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர். இதுகுறித்து தரங்கம்பாடி பகுதி மீனவர்கள் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் துறைமுகம் கட்டுமான பணி நடைபெற்று வருவதால், தற்சமயம் மீன்பிடி தடை காலத்தில் எங்களது விசை படகுகளை பழுது நீக்கம் செய்து, வர்ணம் பூசும் பணிக்காக காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய துறைமுகம் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
தரங்கம்பாடி துறைமுகம் கட்டுமான பணி முடிந்தபிறகு இங்கேயே பராமரிப்பு பணிகளை செய்ய உள்ளோம். மீன்பிடி தடை காலம் முடிந்த பிறகு வழக்கம்போல் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து வருவோம் என்றனர்.
அசைவ பிரியர்கள் கவலை
மீன்பிடி தடை காலம் குறித்து அசைவ பிரியர்கள் கூறுகையில், கடற்கரை பகுதிக்கு அருகே வசிப்பதால் காலம் காலமாக மீன்களை விரும்பி சாப்பிட்டு வருகிறோம். மீன்களில் புரோட்டீன் சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்திகள் இருப்பதால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிட்டு வருகிறோம்.
விடுமுறை நாட்களில் கொடுவா, வஞ்சிரம், சுறா, கேரை, ஷீலா, பாரை, திருக்கை, கருவவ்வால், வெள்வவ்வால், பெரிய கனவாய், மாஸ், முள் வாலை, பெரியவகை கார்த்திகை வாலை போன்ற மீன்களை விரும்பி சாப்பிடுவோம். இந்தநிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்து விட்டதால், விலை உயர்ந்த மீன்கள் கிடைப்பது மிகவும் அரிது என கவலையுடன் தெரிவித்தனர்.