முதலையை பிடிக்க கண்காணிப்பு குழு

முதலையை பிடிக்க கண்காணிப்பு குழு

Update: 2021-04-14 17:09 GMT
முதலையை பிடிக்க கண்காணிப்பு குழு
இடிகரை

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் சின்னமத்தம்பாளையம் அருகே ஏழெருமைப்பள்ளம் ஓடை உள்ளது. இந்த ஓடையில் உள்ள தடுப்பணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுமார் 10 அடி நீளம் உள்ள முதலை வெளியே வந்தது. 

இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக  இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் 20 நிமிடங்கள் கழித்து அந்த முதலை தன்ணீருக்குள் மூழ்கி மறைந்தது. 

இதனை தொடர்ந்து அந்த முதலையை பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஇருந்தனர். 

அதன்பின்பு பெரியநாயக்கன்பாளையம் வனசரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் முதலை பிடிப்போர் ஜெரால்ட் வில்சன், சாகுல்ஹமீது மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஏழெருமைப்பள்ளம் ஓடை மற்றும் தடுப்பணையை ஆய்வு செய்தனர். 

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ஒரு தடுப்பணைக்கும், மற்றொரு தடுப்பணைக்கும் இடையே சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த பள்ளத்தில் உள்ள நீருடன் சாக்கடை நீர் தேங்கி ஆகாயத்தாமரை அடர்த்தியாக வளர்ந்துள்ளது. 

அதனால் உரிய ஆய்வு செய்தே முதலையை பிடிக்க வேண்டும். மேலும் இந்த முதலை பவானி ஆற்றில் இருந்து இங்கு வந்து சேர்ந்து இருக்கலாம் என்று தெரிகிறது. 

தற்போது இந்த முதலை கரை ஒதுங்குவதை கண்காணிக்க வனத்துறை சார்பில் மூன்று பேர் கொண்ட  குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்