வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தம்பதி பலி

வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தம்பதி பரிதாபமாக இறந்தனர். அவர்களது குழந்தை படுகாயம் அடைந்தது.

Update: 2021-04-14 16:09 GMT
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தம்பதி பரிதாபமாக இறந்தனர். அவர்களது குழந்தை படுகாயம் அடைந்தது. 
கார் மோதியது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குன்னம்பட்டியை சேர்ந்தவர் சிக்கணன் (வயது 32). இவரது மனைவி மல்லிகா (26). இவர்களுக்கு வீரதிம்மு (4) என்ற மகள் உள்ளாள். சிக்கணன் வேடசந்தூரில் உள்ள தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிக்கணன், தனது மனைவி, மகளுடன் தியேட்டரில் சினிமா பார்ப்பதற்காக வேடசந்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 
வேடசந்தூர் அருகே தம்மணம்பட்டி பிரிவு பகுதியில் சிக்கணன் வந்தபோது, அங்குள்ள திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. 
தம்பதி பலி
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த சிக்கணன், அவரது மனைவி மல்லிகா, குழந்தை வீரதிம்மு ஆகியோர் தூக்கிவீசப்பட்டனர். இதில் சிக்கணன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த மல்லிகா, வீரதிம்மு ஆகியோர் உயிருக்கு போராடினர். 
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மல்லிகா இறந்துபோனார். குழந்தை வீரதிம்முவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, விபத்திற்கு காரணமான காரை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்த அப்துல்கலாம் (51) என்பவரை கைது செய்தனர். 
கிராம மக்கள் தர்ணா
இதற்கிடையே சிக்கணன் வசிக்கும் குன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், நாகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல், துணைத்தலைவர் தாரணி கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் சிக்கணனின் உடல் வைக்கப்பட்டிருந்த வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் மருத்துவமனை முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தம்மணம்பட்டி பிரிவில் நான்கு வழிச்சாலையின் இருபக்கமும் உள்ள சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. சேதமடைந்த இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. அந்த வகையில் நடந்த விபத்தில் தான் சிக்கணனும், அவரது மனைவியும் இறந்துள்ளனர். எனவே சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார், போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்