கோவில்களில் சிறப்பு பூஜை

தமிழ்புத்தாண்டையொட்டி திருப்பூரில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். வீடுகளில் பழங்கள் வைத்து வழிபட்டனர்.

Update: 2021-04-14 13:56 GMT
திருப்பூர்
தமிழ்புத்தாண்டையொட்டி திருப்பூரில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். வீடுகளில் பழங்கள் வைத்து வழிபட்டனர்.
தமிழ் புத்தாண்டு
சித்திரை மாதம் 1ந் தேதி தமிழ் புத்தாண்டாக நேற்று திருப்பூரில் கொண்டாடப்பட்டது. புத்தாண்டையொட்டி திருப்பூரில் உள்ள கோவில்களில் நேற்று காலை முதல் சிறப்பு பூஜை நடைபெற்றது. கடந்த ஆண்டு புத்தாண்டையொட்டி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஊரடங்கு தளர்வுகளுடன் இருப்பதால் கோவில்களில் திரளானவர்கள் சாமி தரிசனம் செய்தனர். சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வரிசையில் நின்று கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சித்திரை கனியை முன்னிட்டு வழக்கம் போல் கோவிலில் பூஜை நடைபெற்றது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கோவில் நுழைவுவாசலில் உடல் வெப்பநிலை கண்டறியும் தானியங்கி கருவி மூலமாக பரிசோதனை செய்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
முககவசம்
சாமி தரிசனம் முடிந்ததும் கோவில் வளாகத்தில் அமருவதற்கோ, கோவிலை சுற்றிவரவோ பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. முககவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவிப்பு பலகையில் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுபோல் பெருமாள் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், சாய்பாபா கோவில், அய்யப்பன் கோவில், கல்யாண சுப்பிரமணியசாமி கோவில், திருப்பூர் திருப்பதி கோவில், பத்திரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அய்யப்பன் கோவில் வளாகத்தில் மலர்களால் கோலங்கள் வரையப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மன் நேற்று ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு காட்சியளித்தார்.
சித்திரைக்கனி
சித்திரைக்கனி விழாவை வீடுகளில் மக்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். மா, பலா, வாழை மற்றும் கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி உள்ளிட்ட பல வகையான பழங்களை தட்டில் வைத்து, ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க நகைகளையும் அதில் வைத்து முகம் பார்க்கும் கண்ணாடியை முன் வைத்து வணங்கினார்கள். 
பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே சித்திரைக்கனியை கொண்டாடினார்கள். திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் நேற்று தமிழ்புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்