கொரோனா தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகளின் கடைகள் மூடப்படும்

ஊட்டியில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகளின் கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2021-04-14 13:48 GMT
ஊட்டி

ஊட்டியில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகளின் கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கூட்டம் அதிகரிப்பு

சித்திரை மாத முதல் நாளான நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. விடுமுறை நாள் என்பதால் ஊட்டி உழவர் சந்தை, நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதற்கிடையே உழவர் சந்தை, மார்க்கெட்டில் உள்ள கடைகளில் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா திடீரென ஆய்வு செய்தார். அவர் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா?, அனைவரும் முககவசம் அணிந்து உள்ளார்களா? என்று ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் கொரோனா பரவலை தடுக்க கடைகளுக்கு முன்பு வாளியில் தண்ணீர், கிருமிநாசினி அல்லது சோப் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

எச்சரிக்கை

உழவர் சந்தையில் கைகளை சுத்தப்படுத்திய பின்னர் உள்ளே செல்லுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்ட வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் விவரங்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:- நீலகிரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டியில் காய்கறி, பழங்கள், மளிகை கடை வியாபாரிகள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக முகாம் நடத்தப்பட்டது. 

பஸ்களில் ஆய்வு

தடுப்பூசி செலுத்தாதவர்கள் மீண்டும் தடுப்பூசி செலுத்த தனி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன் மூலம் தொற்று பரவலை தடுக்க முடியும். பொதுமக்கள் அதிகம் வருவதால் பாதிப்பு ஏற்படும் பகுதியாக உள்ளது. கடைகளை சுத்தமாக வைக்க வேண்டும். 

போதுமான தடுப்பு மருந்துகள் இருப்பு உள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். அரசு தெரிவித்த பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் சரியான விதத்தில் முககவசம் அணிந்து உள்ளார்களா?, டிரைவர்கள், கண்டக்டர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுகிறார்களா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதற்கிடையில் ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் முக கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாது என்று முடிவெடுத்து ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

மேலும் செய்திகள்