அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் தனியாக வசித்த முதியவர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார்
அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் தனியாக வசித்த முதியவர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
அரக்கோணம்,
அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் பெரிய தெருவில் வசித்தவர் வரதன் (வயது 74). இவருடைய மனைவி கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனால் வரதன் தனியாக வசித்து வந்தார். இவருக்கு சொந்தமாக வீடு மற்றும் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. வரதன் நில தரகராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
தனியாக வசித்து வந்த வரதன் தினமும் அதிகாலையில் வாசலுக்கு தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேச்சுக் கொடுப்பது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று காலை விடிந்து நீண்டநேரமாகியும் வரதன் வெளியில் வரவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் வரதனின் வீட்டின் கதவை தட்டினர். அப்போதும் அவர் வெளியே வரவில்லை.
கழுத்து அறுத்து படுகொலை
இதனால் சந்தேகமடைந்த அவர்கள் தக்கோலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் கதவை திறந்து பார்த்தபோது வரதன் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அவரை யாரோ மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலைசெய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து வரதனின் ஊடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் வரதன் நில தரகராக செயல்பட்டு வந்ததாகவும், அவருக்கு சொந்தமாக வீடு மற்றும் நிலம் இருப்பதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
சொத்துக்காக கொலையா?
போலீசார் வரதன் வீட்டை சோதனை செய்தபோது வீட்டில் கருப்பு பை ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் கத்தி, கயிறு மற்றும் மயக்க மருந்து போன்ற பொருட்கள் இருந்ததாக தெரிகிறது. இதனால் வரதனை திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.
வீட்டில் உள்ள எந்த பொருட்களும் திருட்டு போகவில்லை. எனவே சொத்துக்கு ஆசைப்பட்டு அவரை உறவினர்கள் யாரும் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கொலைசெய்யப்பட்ட வரதன், ஒருவரை தனது வளர்ப்பு மகன் என்று பலரிடமும் தெரிவித்து வந்ததாகவும், அவர் கடந்த சில தினங்களாக வரதனிடம் தனக்கு சொத்தை பிரித்துத் தரும்படி தகராறு செய்து வந்ததாகவும் தெரிகிறது.
எனவே சொத்துக்காக வளர்ப்பு மகன் அல்லது உறவினர்கள் யாராவது அவரை கொலை செய்தார்களா?, அல்லது நிலத்தரகர் என்பதால் முன்விரோதம் காரணமாக வேறு யாராவது அவரை கொலை செய்தார்களா என்று பல்வேறு கோணங்களில் தக்கோலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.