அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-04-14 11:27 GMT
தளி, ஏப்.15-
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அமணலிங்கேஸ்வரர் கோவில்
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒருசேர ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவில் வளாகத்தில் விநாயகர், முருகன், சப்தகன்னிமார் மற்றும் நவகிரக சன்னதிகளும் உள்ளன. 
இந்த கோவிலில் மகாசிவராத்திரி பிரதோஷம், கிருத்திகை அமாவாசை தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. மேலும் கோவிலுக்கு வருகின்ற வழியில் படகு இல்லம், சிறுவர் பூங்கா நீச்சல் குளம், உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அவற்றை பார்வையிடவும் திருமூர்த்தி அணைப்பகுதியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழவும் மலைமீது உள்ள பஞ்சலிங்க அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காகவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர். இதனால் உடுமலை பகுதியின் சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக திருமூர்த்திமலை விளங்கி வருகிறது.
தமிழ் புத்தாண்டு
அந்தவகையில் நேற்று சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அமணலிங்கேஸ்வரர் கோவில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கார் பஸ் வேன் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வந்தனர். அவர்களுடன் தீர்த்தம் எடுத்துச் செல்வதற்காக சுற்றுப்பு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடங்களுடன்  வந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 
பின்னர் பக்தர்கள் பஞ்சலிங்க அருவிக்கு சென்று குளித்துவிட்டு அடிவாரப்பகுதிக்கு வந்தனர். அதன் பின்பு கோவில் முன்பாக உள்ள பாலாற்றில் தீர்த்தம் எடுத்தனர். பின்னர் தீர்த்தக்குடங்களை பக்தி பரவசத்துடன் மேளதாளங்கள் முழங்கியவாறு கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு சென்று பூஜைகள் செய்தனர். அப்போது ஒரு சில பக்தர்கள் அருள் வந்து பக்தி பரவசத்துடன் ஆடினார்கள்.அவர்களை உடன் வந்த பக்தர்கள் எலுமிச்சம் பழம் மற்றும் தீர்த்தம் கொடுத்து சாந்த படுத்தினார்கள். 
போலீஸ் பாதுகாப்பு 
 கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்யுமாறும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருமூர்த்திமலையில் தளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

---
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மும்மூர்திகள். 

மேலும் செய்திகள்