திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீதம்: பெங்களூரு காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை - சென்னையில் பிணமாக கிடந்தனர்
திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பெங்களூரு காதல் ஜோடி ஒன்று சென்னையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் அருகே உள்ள சித்தாலப்பாக்கம் அரசன்கழனி பிரதான சாலை தனியார் குடியிருப்பு அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆணும், இளம் பெண்ணும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பெரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பிணமாக கிடந்தவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அபினாஷ் (வயது 30) மற்றும் அவரது உறவினர் பெண்ணான பல்லவி (21) என்பது தெரிய வந்தது. பெங்களூரு ஆர்.கே.புரத்தை சேர்ந்த பி.காம். பட்டதாரிகளான 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர்.
ஆனால் இருவரது காதலும் பல்லவியின் பெற்றோருக்கு தெரியவரவே, திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 10 நாட்களுக்கு முன்பு காதல் ஜோடிகளான இருவரும் பெங்களூருவில் வீட்டை விட்டு வெளியேறி, சென்னை சித்தாலப்பாக்கத்தில் உள்ள அபினாசின் தங்கை வீட்டிற்கு வந்து தங்கியுள்ளனர்.
இது பற்றி அறிந்த பல்லவியின் பெற்றோர் மகளை பெங்களூருக்கு உடனே திரும்ப வர வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, பெங்களூரு செல்வதாக கூறிக்கொண்டு காதல் ஜோடிகள் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர்.
இதனால் மனமுடைந்த அவர்கள், தங்களை பிரித்து விடுவோர்களோ என்ற அச்சத்தில், அரசன்கழனி பகுதியில் பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்துள்ளதும் தெரியவந்தது.
இது குறித்து பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பெங்களூருவில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தரப்பட்டு உள்ளது. சென்னை வந்ததும் மேலும் தகவல்கள் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.