திருச்சியில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பட்டதாரி வாலிபர் பலி
திருச்சியில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பட்டதாரி வாலிபர் ரெயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
திருச்சி,
திருச்சியில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பட்டதாரி வாலிபர் ரெயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
பட்டதாரி வாலிபர்
மதுரை மாவட்டம் பெருங்குடி ஏர்போர்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 25). பி.பி.ஏ. படித்து முடித்து வேலை தேடி வந்துள்ளார்.
இந்தநிலையில் வேலை தேடி சென்னைக்கு செல்ல அவர் திட்டமிட்டார். இதற்காக அவர் நேற்று முன்தினம் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டார்.
ஓடும் ரெயிலில் இருந்து...
ரெயில் திருச்சி ரெயில் நிலையம் அருகே எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பிரேம்குமார் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில், அவர் ரெயிலின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அந்த பகுதியினர் பிரேம்குமாரின் சட்டைப்பையில் இருந்த செல்போன் மூலம் அவருடைய தாயார் சிவகாமிக்கு தகவல் கொடுத்தனர்.
விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் பிரேம்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதற்குள் சிவகாமியும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு மகனின் உடலை பார்த்து அவர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து திருச்சி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.