தும்பிபாடி அருகே பலத்த காற்றுக்கு வாழை மரங்கள் சாய்ந்து சேதம்
தும்பிபாடி அருகே பலத்த காற்றுக்கு வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.
ஓமலூர்:
காடையாம்பட்டி தாலுகா தும்பிபாடி ஊராட்சி முள்ளுசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் சுமார் 2½ ஏக்கர் பரப்பளவில் திசு வாழை பயிரிட்டுள்ளார். இந்த வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தும்பிபாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதில் பலத்த காற்றினால் ரமேஷ் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் முற்றிலுமாக சாய்ந்து சேதம் அடைந்தன. விவசாயி ரமேஷ் இதுகுறித்து காடையாம்பட்டி தாசில்தார் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தார். சேதமடைந்த வாழை மரங்களின் மதிப்பு சுமார் ரு.2 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.