தண்ணீர் நிரப்பப்பட்ட வாளிக்குள் தவறி விழுந்து 1½ வயது குழந்தை சாவு

தேன்கனிக்கோட்டை அருகே தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியில் தவறி விழுந்து 1½ வயது ஆண் குழந்தை இறந்தது.

Update: 2021-04-13 20:11 GMT
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியில் தவறி விழுந்து 1½ வயது ஆண் குழந்தை இறந்தது.
தண்ணீரில் விழுந்து தத்தளிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்ேதவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேலன். பொக்லைன் ஆபரேட்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர். நேற்று வேலன் மனைவி வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தார்.
1½ வயது ஆண் குழந்தை தண்ணீர் நிரப்பி வைத்திருந்த வாளியில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது வீட்டுக்கு வந்த வேலன் குழந்தையை காணவில்லை என்று மனைவியிடம் கேட்டுள்ளார். பின்னர் கணவன்-மனைவி 2 பேரும் குழந்தையை வீட்டில் தேடினர். அப்போது குழந்தை வாளியில் உள்ள தண்ணீரில் தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது.
குழந்தை சாவு
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வேலன் குழந்தையை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குழந்தை இறந்தது குறித்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வாளியில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்து ஆண் குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்