நெல்லையில் பலத்த மழை: ஆற்றில் குளித்த பெண் மின்னல் தாக்கி சாவு

நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண் மின்னல் தாக்கி பலியானார்.

Update: 2021-04-13 20:10 GMT
நெல்லை:
நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண் மின்னல் தாக்கி பலியானார்.

பலத்த மழை

நெல்லையில் கடந்த 2️ நாட்களாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது. பிற்பகலில் வானில் மேகக்கூட்டங்கள் ஒன்று சேர்ந்து மழை பெய்து வருகிறது. நெல்லை பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்து இதமான சூழ்நிலை நிலவியது.
மாலை 4 மணி அளவில் நெல்லை சந்திப்பு பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையின் போது பலத்த காற்று வீசியதால் ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

பெண் பலி

இதற்கிடையே நெல்லையில் மழையின் போது மின்னல் தாக்கியதில் ஒரு பெண் பலியானார். நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை காமராஜர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ், கொத்தனார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 47). இவர் தினமும் அந்த பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு சென்று குளித்து வருவார்.

வழக்கம்போல ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரி மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடலை அந்த பகுதியில் இருந்த பெண்கள் மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார், ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்தடை

மேலும் நெல்லையில் பெய்த பலத்த மழையால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. மின்கம்பிகளில் மரக்கிளைகள் விழுந்தும், பலத்த காற்றால் மின் ஒயர்கள் உரசியும் சேதம் அடைந்தது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின்சார வினியோகத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்