தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் நாளை தொடங்குகிறது

தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது

Update: 2021-04-13 19:34 GMT
சேதுபாவாசத்திரம்:-

தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

மீன்பிடி தடைக்காலம்

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த ஆண்டு (2020) 135 நாட்களுக்கு மேலாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 
அதன் பின்னர் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீன் வருவாய் இன்றி சிரமப்பட்டனர். டீசல் விலை உயர்வும் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்த கூடாது அல்லது தடைக்காலத்தை அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் அமல்படுத்த வேண்டும். தடைக்காலத்தை 45 நாட்களாக குறைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

கோரிக்கை நிராகரிப்பு

ஆனால் இந்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிராகரித்துள்ளன. வழக்கம்போல் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி தஞ்சை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. 

மீனவர்கள் அச்சம்

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை 45 நாட்கள் மட்டுமே மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் அதன் கால அளவு 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் 2-வது அலை பரவி வரும் நேரத்தில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. 
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டை போல தடைக்காலத்துக்கு பின்னரும் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுமோ? என்று மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்