கொரோனாவுக்கு 2 பேர் பலி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 73 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 26 ஆயிரத்து 725 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 292 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 25 ஆயிரத்து 588 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 73 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் குஜராத், மராட்டியம், உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும், சென்னை, தென்காசி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கடலூர் மாவட்டத்துக்கு வந்த 12 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 2 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 29 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 26 ஆயிரத்து 798 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர நேற்று 2 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
பலி
குமராட்சி அருகே உள்ள எல்லேரி பகுதியை சேர்ந்தவர் 69 வயது பெண். உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் இருந்து உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதேபோல் கடலூர் அடுத்த திருவந்திபுரத்தை சேர்ந்த 62 வயது முதியவர், கொரோனா அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதன்மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மட்டும் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 276 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வர வேண்டி உள்ளது.