பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர் கைது
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் பெண்ணிடம் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 48).
இவருடைய அண்ணன் மகள் சுதா (19). நேற்று முன்தினம் சுதா வீட்டு வாசலில் உட்கார்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அதே ஊரை சேர்ந்த சூரியபிரகாஷ் (20), யோகேஷ் (22), ஜெகதீஷ் (21) ஆகிய 3 பேரும் அங்கு வந்தனர்.
அவர்கள் சுதாவிடம் வேறு ஒருவருடைய முகவரியை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதை கணேசன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த தர்மர், குமார் ஆகிய 3 பேரும் தட்டிக்கேட்டனர். அவர்களை சூர்யபிரகாஷ் உள்பட 3 பேர் தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் கணேசன் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யோகேசை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சூரியபிரகாஷ், ஜெகதீசை போலீசார் தேடி வருகின்றனர்.