குழந்தை திருமணம் செய்த 2 சிறுமிகள் மீட்பு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் குழந்தை திருமணம் செய்த 2 சிறுமிகளை அதிகாரிகள் மீட்டனர்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமிக்கும், சிறப்பாறை கிராமத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவருக்கும் குழந்தை திருமணம் நடந்தது.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பிற்கும், சமூக நலத்துறைக்கும் புகார் வந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 13 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர், மாப்பிள்ளையின் பெற்றோர், உறவினர்கள் உள்பட 6 பேர் மீது குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஆண்டிப்பட்டியை அடுத்த வருசநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமிக்கும், 32 வயது வாலிபருக்கும் குழந்தை திருமணம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வந்த புகாரின்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பு, சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் 2 சிறுமிகளையும் மீட்டு தேனியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.