20 மையங்களில் தடுப்பூசி திருவிழா

தேனி மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 20 மையங்களில் தடுப்பூசி திருவிழா தொடங்கியுள்ளது.

Update: 2021-04-13 18:09 GMT
தேனி: 


கொரோனா தடுப்பூசி
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவல் 2-வது அலையாக உருவாகி வேகமாக பரவி வருகிறது. 

இந்தியாவிலும் பல மாதங்களுக்கு பிறகு இந்த வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. 

தமிழகத்திலும் பாதிப்பு அதிகரித்து வருவதால் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது.


இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் இந்த பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதன்படி தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.

20 மையங்கள்
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 20 இடங்களில் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் 1,008 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

நேற்று ஒரே நாளில் 916 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி திருவிழாவின் முதல் 2 நாட்களில் 1,924 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி திருவிழா வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது. 

பள்ளி மருத்துவ குழுக்கள், நடமாடும் மருத்துவ குழுக்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள் போன்றவற்றை சேர்ந்தவர்களின் பங்கேற்புடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 

தேனி மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் சுமார் 4½ லட்சம் பேர் உள்ளனர். 

அவர்களை தடுப்பூசி மையங்களுக்கு அழைத்து வருவதற்கு 20 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்காக மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 

தேவைக்கு ஏற்ப வாரம் ஒரு முறை தடுப்பூசிகளை பெற்று இருப்பு வைத்து மக்களுக்கு செலுத்தப்பட உள்ளது.

மேலும் செய்திகள்