நெகமத்தில் போக்குவரத்து நெரிசல் பழைய போலீஸ் நிலையம் அருகே சிக்னல் அமைக்க வேண்டும்
நெகமத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பழைய போலீஸ் நிலையம் அருகே சிக்னல் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நெகமம்
நெகமத்தில் சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இங்குள்ள 4 ரோடு பகுதியில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி, போலீஸ் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வங்கிகள் ஆகியவை உள்ளதால் இங்கு வந்து செல்பவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
எனவே இங்குள்ள பழைய போலீஸ் நிலையம் அருகே உள்ள 4 ரோட்டில் சிக்னல் அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை தடுக்க முடியும்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, நெகமத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு காயங்களுடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது.
இதனால் இந்த வழியாக செல்லவே பயமாக உள்ளது. இதுபோன்ற விபத்துகள் நடப்பதை தடுக்க உடனடியாக சிக்னல் அமைக்க வேண்டும் என்றனர்.