ஆனைமலை அருகே தனித்தீவாக மாறிய கிராமம்
ஆனைமலை அருகே தனித்தீவாக ஒரு கிராமம் மாறி உள்ளது. சாலை வசதி இல்லாததால் இங்குள்ள மக்கள் கேரளாவை சுற்றி வரும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
ஆனைமலை அருகே தனித்தீவாக ஒரு கிராமம் மாறி உள்ளது. சாலை வசதி இல்லாததால் இங்குள்ள மக்கள் கேரளாவை சுற்றி வரும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது.
தனித்தீவாக மாறிய கிராமம்
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள கிராமம் ஒன்றில் மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. குறிப்பாக இந்த கிராமத்துக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் தனித்தீவாக மாறி உள்ளது.
இந்த டிஜிட்டல் மைய உலகத்தில் இப்படி ஒரு கிராமம் இருப்பது மிகக்கொடுமை என்று பலர் கூறி வருகிறார்கள்.
சாலை வசதி இல்லாததால் இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தமிழகம் வர கேரளாவை நம்பி உள்ளனர். அதாவது இந்த கிராமம் தமிழகத்துக்குள் இருக்கிறது.
ஆனால் இங்கு செல்ல சாலை வசதி இல்லாததால், கேரளாவுக்குள் சென்று பின்னர் தமிழகத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு செல்லும் நிலை நீடித்து வருகிறது.
வடக்குபாறை மேடு
ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சியை சேர்ந்த வடக்குபாறை மேடுதான் அந்த கிராமம். ஆனைமலையில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் இந்த கிராமம் இருக்கிறது. இந்த கிராமம் பூகோள அடிப்படையில் தமிழக பகுதிக்குள் இருக்கிறது.
ஆனால் இங்கிருந்து நேரடியாக கிராமத்துக்கு செல்ல சாலை வசதி இல்லை. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பள்ளி, ஆஸ்பத்திரி, அவசர தேவை என்று அனைத்து தேவைகளுக்கும் ஆனைமலை மற்றும் பொள்ளாச்சிக்கு தான் வருகிறார்கள்.
கிராம மக்கள் அவதி
இதனால் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கேரள பகுதியான நெல்லிமேடு சென்று, அங்கிருந்து தமிழக-கேரள எல்லையான மீனாட்சிபுரத்துக்கு வருகிறார்கள். இதற்கு 2 பஸ்கள் ஏற வேண்டிய நிலை உள்ளது.
அதாவது வடக்குபாறை மேட்டில் இருந்து ஒரு கி.மீ. தூரம் உள்ள நெல்லிமேடுக்கு நடந்து செல்ல வேண்டும்.
பின்னர் அங்கிருந்து 3 கி.மீ. தூரம் கொண்ட மீனாட்சிபுரத்துக்கு பஸ்சில் வர வேண்டும். பின்னர் அங்கிருந்து செல்ல வேண்டிய இடத்துக்கு மற்றொரு பஸ்சில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தமிழக எல்லைக்குள் இருந்து கொண்டு தமிழகத்துக்கு வர சாலை வசதி இல்லாததால் இந்த கிராம மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கூறியதாவது:-
2 பஸ்கள் ஏற வேண்டும்
எங்கள் கிராமத்தில் 250 வீடுகள் உள்ளன. இங்கு உள்ளவர்கள் பெரும்பாலும் கூலி வேலைதான் செய்து வருகிறார்கள். எங்கள் கிராமத்தில் இருந்து மீனாட்சிபுரத்துக்கு வந்துதான் மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
ஆனால் அதற்கு நேரடியாக பஸ் வசதி இல்லை. கேரள பஸ்சில்தான் வர வேண்டும். பின்னர் அங்கிருந்து பொள்ளாச்சி மற்றும் ஆனைமலைக்கு செல்ல வேண்டும்.
இங்குள்ள அனைவரும் சிகிச்சைக்காக ஆனைமலை அருகே உள்ள பெரியபோதுவில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் செல்கிறோம். இதற்கும் 2 பஸ்களில் ஏற வேண்டும். இதனால் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
எங்கள் கிராமத்தில் இருந்து மீன்கரை ரோடு திவான்சாபுதூர் பெரியார் நகர் வரை 2½ கி.மீ. தூரத்துக்கு சாலை வசதி அமைத்தால் போதும்.
ஆனால் நிலம் இல்லை என்ற காரணத்தை காட்டி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் தமிழகத்தில் இருந்து கொண்டே அகதிகளாக வாழ வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
வசந்தா என்பவர் கூறியதாவது:-
கர்ப்பிணிகள் பேறுகால பரிசோதனைகள் செய்வதற்கு வளந்தாயமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டிய உள்ளது. இதற்கு 2 பஸ்களை பிடித்து செல்ல வேண்டிய உள்ளது. அருகில் கேரளா மாநிலம் நெல்லிமேட்டில் ஆஸ்பத்திரி உள்ளது.
ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைகள் செய்தால் தான் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும்.
மேலும் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் செல்வதற்கும் இதேபோன்று 2 பஸ்களை பிடித்து தான் திவான்சாபுதூர் செல்ல வேண்டிய இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சாலை அமைக்க வேண்டும்
கோவிந்தசாமி என்பவர் கூறியதாவது:-
சாலை வசதி, மயான வசதி, சாக்கடை கால்வாய் வசதி என அடிப்படை வசதிகளும் இல்லை. யாராவது உயிரிழந்தால் பொள்ளாச்சியில் உள்ள மயானத்திற்கு தான் வர வேண்டிய நிலை உள்ளது.
பொதுகழிப்பிடம் இல்லாததால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சீரான குடிநீர் வசதியும் இல்லை. இங்குள்ள மாணவர்கள் அனைவருமே திவான்சாபுதூர் மற்றும் ஆனைமலை, பொள்ளாச்சியில்தான் படித்து வருகிறார்கள்.
ஆனால் சாலை வசதி இல்லாததால் பெரிதும் சிரமமாக இருக்கிறது. எங்கள் கிராமத்துக்கு சாலை அமைக்க தனியார் சிலர் இடம் கொடுப்பதற்கு முன் வருவதாக தெரிகிறது.
எனவே அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இடத்தை வாங்கி சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊரடங்கு அறிவித்தால் சிரமம்
தினகரராஜ் என்பவர் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பு காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதுவரைக்கும் நாங்கள் சென்று வருவதற்கு எந்த சிரமமும் இல்லை.
சோதனை சாவடியில் உள்ள போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு எங்களை தெரியும் என்பதால் எதுவும் சொல்வது இல்லை. இதே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ஆனைமலை ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்கப்படும்
வடக்குபாறை மேடு கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.
சாலை வசதி இல்லாததால் அவர்கள் கேரளா சென்று, அங்கிருந்து வடக்குபாறை மேட்டிற்கு சென்று வருகின்றனர்.
திவான்சாபுதூர் அருகே உள்ள பெரியார் நகரில் இருந்து வடக்குபாறை மேட்டுக்கு சாலை வசதி அமைக்கலாம்.
ஆனால் வழியில் தனியார் இடம் உள்ளது. அவர்கள் நிலம் கொடுத்தால் நாங்கள் சாலை அமைக்க தயாராக இருக்கிறோம். நிலம் கிடைத்தால் உடனடியாக சாலை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.