பிஏபி கால்வாயை சேதப்படுத்தும் மரங்களை அகற்ற வேண்டும்
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பி.ஏ.பி. கால்வாயை சேதப்படுத்தும் மரங்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பி.ஏ.பி. கால்வாயை சேதப்படுத்தும் மரங்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பி.ஏ.பி. கால்வாய்
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு, தென்னைக்கு அடுத்தபடியாக தக்காளி, வெண்டை, கத்தரி, அவரை, காலிபிளவர், பீட்ரூட், மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம், சோளம், மக்காச்சோளம் போன்றவை பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த ஒன்றியத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பி.ஏ.பி. பாசன திட்டத்தில் உள்ளது. இங்கு பிரதான கால்வாய் செல்கிறது.
இந்த நிலையில் இங்குள்ள ஜல்லிபட்டி, செஞ்சேரிமலை, வதம்பச்சேரி, ஓடக்கல்பாளையம், பச்சாபாளையம், மலைப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள பி.ஏ.பி. பிரதான கால்வாய் ஓரத்தில் மரங்கள், செடிகள் அதிகளவில் வளர்ந்து உள்ளன.
உடையும் நிலை
மரங்களின் வேர்கள் வாய்க்காலின் ஓரத்தில் போடப்பட்டு உள்ள கான்கிரீட் தடுப்புச்சுவரை உடைத்து வருகிறது.
இதனால் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும்போது, அதன் வழியாக தண்ணீர் வெளியேறி வீணாக செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் இந்த நிலை நீடித்தால் கால்வாய் உடையக்கூடிய நிலை இருக்கிறது. எனவே இந்த செடிகள் மற்றும் மரங்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:-
அகற்ற வேண்டும்
இந்த கால்வாயின் ஓரத்தில் கருவேல மரங்கள்தான் அதிகளவில் உள்ளன. இந்த மரங்களால் எவ்வித பயனும் இல்லை.
அதுபோன்று செடிகள் அதிகளவில் வளர்ந்து இருக்கிறது.கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கு முன்பு வாய்க்கால் நன்றாக இருக்கிறதா என்று அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம்.
ஆனால் அதிகாரிகள் ஆய்வு செய்தாலும் கரையோரத்தில் வளர்ந்து இருக்கும் செடிகள் மற்றும் மரங்களை வெட்டுவது இல்லை. இந்த நிலை நீடித்தால் கால்வாய் உடைந்துபோக வாய்ப்பு உள்ளது.
எனவே அதிகாரிகள் தாமதிக்காமல் உடனடியாக கால்வாய் ஓரத்தில் வளர்ந்துள்ள மரங்கள், செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.