8 ஆயிரத்து 260 பேருக்கு கொரோனா தடுப்பூசி

8 ஆயிரத்து 260 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Update: 2021-04-13 16:29 GMT
கொரோனா தடுப்பூசி
மேட்டுப்பாளையம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவின்பேரில் மேட்டுப்பாளையத்தில் மருத்துவத்துறை மற்றும் நகராட்சித் துறை சார்பில் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணன் தலைமையில் டாக்டர் சரவணன் மேற்பார்வையில் பொது மக்களுக்கு தினசரி கொரோனா பரிசோதனை மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 


மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் தினசரி காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

தொடக்க காலத்தில் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டாத பொதுமக்கள் தற்போது தடுப்பூசி செலுத்துவதின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு மருத்துவமனைக்கு கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கி உள்ளனர். 


தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இது வரை மொத்தம் 8ஆயிரத்து 260 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர்.

 இதில் முதல் தவணையாக 7120 பேரும், இரண்டாவது தவணையாக 860 பேரும்,தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை 5736 பேரும், கோவேக்சின் தடுப்பூசியை 2244 பேரும் செலுத்திக் கொண்டு உள்ளனர்.


 தற்போது 45 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி மையத்தில் தினசரி 200 லிருந்து 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

 மேலும் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாட்கள் நடைபெற்று வந்தது.

தற்போது தினசரி கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டியதில்லை. ஆதார் கார்டு ஜெராக்சுடன் தங்களின் தொலைபேசி எண் எழுதிய சான்றினை கொண்டுவந்தால் போதுமானது. 

மேலும் மேட்டுப்பாளையம் நகராட்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் வினோத் குமார் தலைமையில் பொது மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 

கடந்த 5-ந் தேதி முதல் நேற்று மொத்தம் 399 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் நகரப்பகுதிகளில் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை செய்வதிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்