கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2,550 படுக்கை வசதிகள் தயார்- கலெக்டர் கதிரவன் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரத்து 550 படுக்கை வசதிகள் தயாராக உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரத்து 550 படுக்கை வசதிகள் தயாராக உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
ஈரோடு மாவட்டத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பான அனைத்து அரசு அதிகாரிகளுடன் கூடிய ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 550 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் கல்லூரி கொரோனா சிகிச்சை மையங்கள் என முன்எச்சரிக்கையாக 2 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
கொரோனா பரிசோதனை மையங்கள்
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் உடல் ஆரோக்கியத்தை பொறுத்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொள்ளவும், அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளவும் 4 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபம், கோபி கலை அறிவியல் கல்லூரி ஆகிய 4 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதேபோல் பவானி, மொடக்குறிச்சி ஆகிய 2 இடங்களிலும் பரிசோதனை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களில் 146 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுடன் தொடர்பில் இருந்த 2 ஆயிரத்து 35 பேர் 514 வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.