தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை
அரசின் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கண்காணிப்பு அதிகாரி முருகானந்தம் தெரிவித்தார்.
கோவை
அரசின் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கண்காணிப்பு அதிகாரி முருகானந்தம் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று இரவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தொழில் துறை அரசு முதன்மை செயலாளரும், மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரியுமான முருகானந்தம் தலைமை தாங்கினார்.
மாவட்ட கலெக்டர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.
கூடத்தில் மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி முருகானந்தம் பேசும்போது கூறியதாவது:- கோவை மாவட்ட நிர்வாகம் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது நாளொன்றுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதலாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
42,900 தடுப்பூசிகள் இருப்பு
கோவை மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 64 ஆயிரத்து 502 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் 3 ஆயிரம் தடுப்பூசி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 2,700 தடுப்பூசி,
அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 17 ஆயிரம் தடுப்பூசி, தனியார் மருத்துவமனைகளில் 11,700 தடுப்பூசி, மாவட்ட சுகாதார கிடங்கில் 8,500 தடுப்பூசி என மொத்தம் 42 ஆயிரத்து 900 கொரோனா தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
உரிய நடவடிக்கை
கொரோனா நோய் தொற்றுவை கண்காணித்து, கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல் துறை, உள்ளாட்சித்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
கடந்த இரு மாதங்களுக்கு முன்புவரை கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் மக்கள் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாததால் கோவையில் கொரோனா அதிகரித்து வருகிறது.
இதனால் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 500 முதல் 600 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலுமாக தடை விதிப்பதும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுடன் அரசு அனுமதி அளித்துள்ளது.
கண்காணிக்க வேண்டும்
அதன்படி மாவட்டம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள தொற்று தடுப்பு நடைமுறைகளை முறையாக கண்காணிக்க வேண்டும்.
தொழிற்சாலை, வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணியாற்றுபவர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும்.
அத்துடன் கை கழுவும் திரவம் உபயோகப்படுத்துவதுடன், முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
அரசின் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊரகம், நகரப் பகுதிகளில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு கள அளவிலான குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும்.
மாநகரில் மருத்துவ முகாம்களை அதிகரிக்க வேண்டும். வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தவறாமல் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். அரசின் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், அரசு மருத்துவமனை டீன் ஏ.நிர்மலா, இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீன் ரவீந்திரன், சுகாதாரத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணா, துணை இயக்குநர் (பொறுப்பு) பாலுசாமி உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.