திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
செம்பட்டு,
திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
தொழில்நுட்ப கோளாறு
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 9.45 மணிக்கு திருச்சியில் இருந்து ஷார்ஜாவிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படுவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. அப்போது அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து விமான நிறுவனத்தின் சார்பில், தொழில்நுட்ப கோளாறை சரி செய்வதற்கான பணியினை தொழில்நுட்ப வல்லுனர்கள் மேற்கொண்டனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படாததால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
விடுதியில் தங்க வைப்பு
இதையடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் 116 பேர், விமான நிறுவனத்தின் சார்பில் விமான நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். அந்த விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 9.45 மணிக்கு விமானம் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து
இந்த நிலையில் துபாயில் இருந்து திருச்சிக்கு நேற்று இரவு 7.30 மணிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக ரத்துசெய்யப்பட்டது. அந்த விமானம் இன்று காலை 8.15 மணிக்கு திருச்சிக்கு வந்தடையும் என்றும், அந்த விமானம் மீண்டும் நாளை மாலை 4.15 மணிக்கு ஷார்ஜா நோக்கி புறப்பட்டுச் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு, மற்றொரு விமானம் ரத்து போன்றவற்றால் பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.