விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை விடுவிக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்
விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை விடுவிக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே உள்ள உமையதலைவன்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் பங்குனி கொடை விழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு பெண்கள் உள்பட பலர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
அப்போது, அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் (வயது 19) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். வழிவிடுவதில் அவருக்கும், ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் முருகேசன் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் திருவேங்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், 3 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சங்கரன்கோவில்-திருவேங்கடம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போலீசார் அழைத்து சென்ற 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.