கூலிப்படையை ஏவி காதலனை கொல்ல முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

கூலிப்படையை ஏவி காதலனை கொல்ல முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-04-12 19:08 GMT
களக்காடு:

களக்காடு அருகே பெத்தானியா மலைப்பகுதியில் நாட்டுகுண்டுகள், அரிவாள்களுடன் சுற்றி திரிந்த கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் பணகுடியை சேர்ந்த காதலனை கொலை செய்ய கல்லூரி மாணவி, கூலிப்படையை ஏவிய விவகாரம் தெரிய வந்தது. இதுதொடர்பாக தலைமறைவான மாணவி மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த தீபக்ராஜா, ஊசிபாண்டியன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே கூலிப்படையினருக்கு வெடிகுண்டுகள் எப்படி கிடைத்தது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முடுக்கலான்குளத்தை சேர்ந்த சுடலைமாடன் மகன் பெரியபாண்டி என்ற பெருமாள்பாண்டி (வயது 32) என்பவர் கூலிப்படையினருக்கு வெடிகுண்டுகள் சப்ளை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த பெருமாள்பாண்டியை தனிப்பிரிவு போலீசார் கைது செய்து, களக்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பெருமாள்பாண்டியை போலீசார் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்