ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்
ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்கள் நலசங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி,
தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பால்ராஜ் மற்றும் மாநில துணைத்தலைவர் செல்லக் கண்ணன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- நாட்டுப்புற கலைஞர்களாகிய நாங்கள் திருவிழாக்காலங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் குழந்தைகளின் படிப்பு, மருத்துவம் மற்றும் குடும்ப செலவை செய்து வருகிறோம். .இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. இதனால் எங்களது வாழ்வாதரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்க்க கலை நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும். மேலும் மாதந்தோறும் நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.