ஏலகிரி மலையில் தி்.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி

ஏலகிரிமலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பண்ணை வீட்டின் நுழைவு வாயில் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-12 18:25 GMT
ஜோலார்பேட்டை

துரைமுருகன் பண்ணை வீடு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைைய அடுத்த ஏலகிரிமலை சுற்றுலா தலத்தில் எந்தக் காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை இருந்து வருவதால் பல்வேறு இடங்களை சேர்ந்த வி.ஐ.பி.கள் ஏலகிரிமலையில் நிலம், பண்ணை வீடுகள் ஆகியவற்றை வாங்கி வைத்து உள்ளனர். அவர்கள் கோடைக்காலத்தில் ஏலகிரிமலைக்கு வந்து தங்கி ஓய்வெடுத்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில் ஏலகிரிமலையில் உள்ள மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ.வுக்கு ெசாந்தமாக 25 ஏக்கர் நிலப்பரப்பின் மத்தியில் பண்ணை வீடு உள்ளது. இதில் துரைமுருகன் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். அந்தப் பண்ணை வீட்டை திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரை அடுத்த புனிகாந்தூர் பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரின் மகன் பிரேம்குமார், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பராமரித்து வருகின்றனர். 

ஹார்டு டிஸ்க் திருட்டு

அங்கு அவர்கள் தங்கும் வகையில் பண்ணை வீட்டின் அருகில் ஒரு தனி அறை கட்டப்பட்டுள்ளது அந்தத் தனி அறையில் பிரேம்குமாரும், குடும்பத்தினரும் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு துரைமுருகன் பண்ணை வீட்டின் திறந்தவெளியில் உள்ள இடத்தில் படுத்து பிரேம்குமார் தூங்கினார். அப்போது மர்மநபர்கள் யாரோ பண்ணை வீட்டுக்குள் புகுந்து, நுழைவு வாயிலின் ெபரிய கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். 

வீட்டுக்குள் பணம், நகைகள் ஏதும் கிடைக்காததால் வீட்டில் இருந்த பொருட்களான கட்டில், பீரோ, நாற்காலிகள், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அவை அனைத்தும் அதிக எடையில் இருந்ததால் எடுத்துச் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மர்மநபர்கள் உள்ளே நுழைந்தது கண்காணிப்பு ேகமராவில் பதிவாகியிருக்கும் எனக்கருதி கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்க்கை திருடி சென்றுள்ளனர்.

போலீ்ஸ் விசாரணை

நேற்று அதிகாலை தூய்மைப் பணியை மேற்கொள்ள பிரேம்குமாரும், அவரின் மனைவியும் படுக்கையில் இருந்து எழுந்து வந்து பார்த்தபோது, பண்ணை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து துரைமுருகன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஏலகிரிமலை போலீசில் புகார் செய்தனர். ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, ஏலகிரிமலை சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். 
மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து, கைரேகையை பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்