வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீப்பிடித்தது
கொரடாச்சேரி அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி, மின்கம்பியில் உரசியது. இதனால் வைக்கோலுடன் லாரி தீப்பிடித்து எரிந்தது.
கொரடாச்சேரி;
கொரடாச்சேரி அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி, மின்கம்பியில் உரசியது. இதனால் வைக்கோலுடன் லாரி தீப்பிடித்து எரிந்தது.
வைக்கோல் ஏற்றிய லாரி
திருவாரூர் மாவட்டம் வாழச்சேரியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருச்சி மாவட்டம் மணப்பாறை நோக்கி சென்று கொண்டு இருந்தது.
கொரடாச்சேரியை அடுத்த அத்திக்கடை அருகே சென்ற போது லாரியின் மேல் ஏற்றி இருந்த வைக்கோல் கட்டுகளின் ஒருபகுதி சாலை ஓரத்தில் தாழ்வாக சென்று கொண்டிருந்த மின்கம்பி மீது உரசியது. இதனால் வைக்கோல் கட்டுகளில் திடீர் என்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
தீப்பிடித்து எரிந்தது
சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் தீப்பிடித்து எரிவதை கண்ட அந்த பகுதி மக்கள் கூச்சலிட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர், தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்த சிங்காரவேலு லாரியை நிறுத்தி விட்டு கீேழ இறங்கினார்.
அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் லாரியில் பற்றிய தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
தீயை அணைத்தனர்
உடனே அருகில் இருந்தவர்கள் லாரியை ஒதுக்குப்புறமாக தள்ளி சென்றனர். பின்னர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். மேலும் கூத்தாநல்லூரில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தண்ணீைர பீய்ச்சி அடித்து லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் லாரி பாதி அளவு எரிந்து நாசம் அடைந்தது.
மின்கம்பிகள் சீரமைப்பு
லாரியில் தீப்பிடித்தபோது பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு ஒதுக்குப்புறமாக லாரியை தள்ளி சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தாழ்வாக சென்ற மின்கம்பிகளே இந்த தீ விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் கூறினர்.
இந்தநிலையில் நேற்று மின்வாரியத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தாழ்வாக சென்று கொண்டிருந்த மின்கம்பியை இழுத்து கட்டி சீரமைத்தனர். இதேபோல அத்திக்கடை பகுதியில் பல்வேறு மின்கம்பங்கள் பழுதடைந்தும், மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் மின்கம்பிகள் மற்றும் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.